Saturday, September 02, 2017

விடுதலைப் போராட்டத்திற்கான விதை!


இது இன்னொரு
விடுதலைப் போராட்டத்திற்கான தொடக்கம்!
கல்விச் சுதந்திரம்
இங்கே பல்லிளிக்கிறது!
காவிப் பாசிசம்
ஒரு உயிரைக்
காவு வாங்கியிருக்கிறது!

பல உயிர்களைக்
காப்பாற்ற வேண்டிய
அந்த ஒரு உயிரைக்
காப்பாற்ற முடியாமல்
கையறு நிலையில்
நாம்!

ஆளும் அரசு
அடிமைச் சாசனத்தை
எழுதிக் கொடுத்திருக்கிறது
அந்தச் சதிகாரக் கும்பலுக்கு!

இன்னும் நாம்
வாளாவிருந்தால்
தமிழினத்தை
வரலாற்றில் கூட
அழித்தொழித்து விடுவார்கள்!

அனிதாவின் மரணம்
அர்த்தமற்றதாகி விடக்கூடாது!
இது விடுதலைப் போராட்டத்திற்கான
விதை!
விருட்சமாக்க வேண்டியது
நம் கடமை!

சோர்ந்து விடாதீர்கள்!
நாம் இன்னும்
சோரம் போய்விடவில்லை!

நம் கோபக் கனலை 
கொழுந்து விட்டு எரியச் செய்வோம்!
காவிப் பாசிசத்தின்
சாம்பல் கூட மிஞ்சக் கூடாது!

அரசியல் வாதிகளுக்குத்தான்
மடியில் கனம்!
நமக்கென்ன பயம்?
கட்சி பேதங்களின்றி
சாதி மதம் களைந்து
களம் காண்போம்!

உறக்கம் தொலைத்தாலென்ன?
விடியலுக்காக விழித்திருப்போம்!
விடுதலைக்கான வழி வகுப்போம்!
கல்வி நமது பிறப்புரிமை!

நினைவில் கொள்ளுங்கள்!
நாளைய அனிதா
நம் மகளாகவும் இருக்கலாம்!

- நாமக்கல் சிபி

Thursday, January 19, 2017

ஏறுதழுவல்


பாரதம்
வரலாற்றுப் பிழையொன்றினை
வலிந்து திணித்திருக்கிக்கிறது
மீண்டும்!

மொழி
கலாச்சாரம்
பண்பாடு
பாரம்பரியம்
என்ற அடையாளங்களை
அழித்தலில்தான்
இனவொழிப்பு
தொடங்குமென்பதை
அறியாதவர்களில்லை நாங்கள்!

மொழித் திணிப்பில்
கற்ற பாடத்தை மறந்து
ஏறுதழுவல் என்ற
எம் பாரம்பரியமொன்றில்
கைவைத்துப் பார்த்திருக்கிறீர்!

அழிந்து போகிற
இனமா எம்மினம்?
அன்றைய விதைப்பின்
இரண்டாம் அறுவடைதான் இது!


முதல்வருக்கு!
ஆட்சிக்கு கவிழ்ப்பிற்கா
அஞ்சுகிறீர்?
ஆரியரிடமா கெஞ்சுகிறீர்?
ஆயிரம் ஆண்டுகளுக்கும்
உங்களுக்கே
அரியணை தருகிறோம்!
சரியென்று மட்டும்
சொல்லுங்கள்!
கட்டவிழ்க்கிறோம்
எங்கள் காளைகளை!

காவலர்களுக்கு!
அடிக்கும் கைகளுக்கும்
அன்னமிடல்தான்
எம் பண்பாடு!
தடியடி நடத்தினாலும்
உங்களுக்குள் தமிழன்
இருப்பது தெரியும்!
கவலைப் படாதீர்கள்!
உம்மேலெல்லாம் எங்களுக்கு
விரோதமில்லை!

உலகமெங்கும்
எங்களுக்கு குரல் கொடுக்கும்
உறவுகளே!
உங்களுக்கு எமது நன்றி!
உடனிருந்து
களமாட இயலவில்லையென
கவலைவேண்டாம் உங்களுக்கு!
இதனை வாசிக்கும்போது
உங்களின்
ஒரு ரோமமெனும்
சிலிர்த்திருக்கும்!
மூன்றாம் சாகுபடியில்
முதல் விதை நீங்கள்தான்!

நன்றி!

நாமக்கல் சிபி
()
இரா. ஜெகன்மோகன்
19/01/2017

Wednesday, March 20, 2013

மாணவர் என்றோர் இனமுண்டு!


இருப்பாய் தமிழா நெருப்பாய் 
இருந்தது போதும் செருப்பாய் 
ஏவுகணைகளைத் தொடுப்பாய்  
விடியலை நமக்கெனக் கொடுப்பாய்!

அரசியல் வஞ்சகர் கண்டோம்! 
ஆண்டவர் நாடகம் கண்டோம்! 
மாணவர் படைதனைக் கண்டே 
நம்பிக்கை உள்ளத்தில் கொண்டோம்! 

தமிழன் என்றோர் இனமுண்டு! 
தனியே அவர்க்கொரு குணமுண்டு! 
மாணவர் என்றோர் இனமுண்டு! 
தனியே அவர்க்கோர் எழுச்சி உண்டு!

மாணவம்  எழுப்பிய வேள்வி இது!
மானிடம் காத்திடும் கேள்வி இது!
தமிழா நமக்கும் உணர்வுண்டா?
இனியும் பொறுத்தால் உயர்வுண்டா? 

அரசியல் பிழைத்தனர்  கோடிகளாய்!
சமயத்தினால் மறந்தனர்  பேடிகளாய்!
வீழ்வோம் என்று திளைத்தோரே! 
எழுந்தோம் என்று  திகைத்திடுவீர்!

மானிடப் புரட்சிகள் கண்டிருப்பர்! இனி 
மாணவப்  புரட்சியைக் கண்டிடுவீர்!   
ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும்   
இவ்வுணர்வுத் தீயினைக்  கொண்டிருப்பர்!

Saturday, December 29, 2012

மரித்து விடு மகளே!

பாராட்டிச் சீராட்டி
வளர்த்துன்னை
வன்புணர்ந்து கொல்லும்
வக்கிர நாய்கள்
உலவும்
இத்தேசத்தில்
உலவ விட இயலாதடி
என் கண்ணே!

நீ
கல்லூரி சென்று
திரும்பும்
ஒவ்வொரு நாளும்
நாங்கள்
செத்து செத்தல்லவா
பிழைக்க வேண்டியிருக்கும்!

வரதட்சணை கொடுத்து
மணம் செய்துகொடுக்க
வக்கில்லாத பெற்றோர்
என எண்ணி விடாதே
என் மகளே!

வக்கிர ஜென்மங்கள்
அலையும் இப்பூமியில்
நீ ஜெனிப்பதைத்தான்
நாங்கள் விரும்பவில்லை!

மகாத்மா
கனவு கண்ட
சுதந்திரம் கிடைக்கட்டும்!
அப்போது மீண்டும்
என் வயிற்றில்
நீ வந்து
உதிப்பாய்!

இப்போது என்
கர்ப்பப்பையிலேயே
நீ மரணித்துவிடு
என் செல்லமே!

Monday, October 17, 2011

தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்

தனிப்பட்ட மத உணர்வுகளை, "சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என்றதொரு அற்புதமான வாசகத்தை இழிவுபடுத்தும் விதமாக பொறுப்பின்றி பின்னூட்டமிட்டிருக்கும் தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான இரமணிதரன் அவர்களையும், தமிழ்மணத்தையும் கண்டித்து எனது தனிப்பட்ட வலைப்பூக்கள் அனைத்தையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கிக்கொள்கிறேன்!

மேலதிகத் தகவல்களுக்கு : காண்க

இப்படிக்கு,

அருணையடி (எ) நாமக்கல் சிபி

Friday, January 28, 2011

BOYCOTT ICCI WORLD CUP 2011Dear World Cup 2011 Sponsors,

As we are deciding to boycott this Cricket World Cup 2011, to contempt the Indian and Tamil Nadu Governments showing negligence and lethargicness on protecting TAMIL FISHERMAN, who are being killed by SRILANKAN COASTGUARDS very frequently, We are informing you, since you are sponsoring those tournaments.


TAMIL NADU Cricket Fans

Tuesday, March 09, 2010

தேடலும் என் தேவதையும்

தேடிக் கொண்டே
இருக்கிறேன்
எனக்கான
தேவதையை!

தேடல்
தொடர்ந்துகொண்டேதான்
இருக்கிறது!

எனக்கான
தேவதையே!
எங்கிருக்கிறாய் சொல்!
எப்போழுது
எனைத் தேடி வருவாய்?


திசை தெரியவில்லை!
தேதியும் அறியவில்லை!
இருப்பினும்
தேடிக் கொண்டே இருக்கிறேன்!


என் காதோரம்
மெல்லியதாய்
உன் குரல் மட்டும்
கேட்கிறது!
இப்பொழுது
நீயும்
என்னைத்
தேடுகிறாயென்று!