Saturday, July 01, 2006

21 : மரணம்

என் வீட்டு வாசலில் நின்று
மெல்ல எட்டிப் பார்க்கிறது!

மரப்பாச்சி பொம்மையுடன்
விளையாடிக் கொண்டிருந்தேன்!
சென்று வா! பிறகு பார்க்கலாம்!
என்றேன்!

இப்போது வரலாமா?
குரல் கேட்டுத் திரும்பினேன்!

இப்போதுதான் மீசை அரும்புகிறது!
இன்னொரு நாள் வா பார்க்கலாம்!
என்றேன்!

"இன்று வசதி எப்படி?" என்று
என்னைப் பார்த்து கண் சிமிட்டியது!

அடடா!
இப்போதுதானே
காதலிக்க தொடங்கியுள்ளேன்!
ஆகாது! ஐயா! ஆகாது!
என்றேன்!

வேலை தேடி வேலை தேடி
அலுத்துப் போய் அழைக்கிறேன்!
"இன்னும் நீ வாழ வேண்டியுள்ளது!"
அப்புறம் பார்க்கலாம்!
என்றது!

கண்ணெதிரே காதலிக்கு
கல்யாணம் ஆகிறது!
தேடிப் பார்க்கிறேன்!

"தேடாதே! இன்னும்
நேரன் இருகிறது'
என்கிறது.

குடும்பச் சுமை தாங்கியே
முதுகில் கூன் விழுந்த நிலையில்
கேட்டுப் பார்க்கிறேன்!

"இல்லை! இல்லை!
இன்னும் கொஞ்சம்
வாழ வேண்டும் நீ"
என்றது!

சொந்தங்கள்
யாரென்று தெரிந்தாயிற்று!
நல்லது கெட்டது அறிந்தாயிற்று!
உலகம் இப்போது புரிந்தாயிற்று!
அல்லல்களும் அவமானங்களும்
இலேசாயின!

இப்போது நான்
வாழ நினைக்கிறேன்!

"என்ன கற்றுக் கொண்டாய்?
இதுவரை? " - என்றது.
மரணம்
"நான் முடிவு செய்வதல்ல"
என்றேன்.

"வாழ்க்கையைக் கற்றுக்
கொண்டாய்!
வந்த வேலை முடிந்தது!
புறப்படு"
என்றது!