Friday, November 09, 2007

26 : அன்னை தரும் சீதனம்!


நான் தனிமையை

உணர்ந்த நேரம்

எனைத் தத்தெடுத்த

தங்கை நீ!



முன்னேழு ஜென்மங்களும்

தொடர்ந்து வந்த சொந்தமென

இந்நாளில் எனக்குவந்த

தங்கையெனும்

நங்கையும் நீ!



உனை

மணமகளாய்க்

கண்ட நாளில்

நானடைந்த மகிழ்ச்சியென்ன!

அன்னையெனக் காணும்

நாளும் இன்று அருகிலென

அறிகையிலே

என் உள்ளம் கொண்ட

உவகையெல்லாம்

இவ்வரிகள்

எடுத்துச் சொல்லிடுமா?



அண்ணனெனக்

கண்டவன் நான்! - இன்று

உன் அன்னையாய்க்

காணுகிறேன்!

அளவிலாத மகிழ்ச்சிதனை

ஆசை நெஞ்சில்

பூணுகிறேன்!



மங்களமாய்

வளைகாப்பு

என் மனக்கண்ணில்

தோன்றுகிறது!



பெரியோர்கள்

ஆசியுடன்

பூமாலை நீ சூடி

நெற்றியிலே சந்தனமும்

கைநிறைய

வளையல்களும்

அணிந்திடும்

காட்சி இன்று

என் கண்களிலே

தெரிகிறதே!



தோளில் நான்

சுமந்து கொள்ள

உன் பிள்ளைக்குச்

சோறூட்ட

"தோ மாமா பாரு..

ஆ காட்டு"

என்று அபிநயம்

செய்வாயோ!



அளவிலாத

ஆனந்தம்

என் நெஞ்சில்

பொங்கியெழ

ஆனந்தக் கண்ணீர்தான்

இவ்வரிகளாய் வழிகிறதோ!



அண்ணன் தரும்

சீதனமாய் - இன்று

தருகின்றேன் ஆசிகளை!

அண்ணன் தரும்

சீதனமா இவ்வரிகள்?

இல்லை இல்லை!

உன்

அன்னை தரும்

சீதனங்கள்!



-------------------------------------------------------------------------------



மணநாள் வாழ்த்துப் பாடலின் வரிகளை இப்போது நினைவு கூர்ந்தேன்.



"இந்த அண்ணன் தோளில் தவழ - ஒருமழலை வேணும் மகிழ!"