Saturday, December 29, 2012

மரித்து விடு மகளே!

பாராட்டிச் சீராட்டி
வளர்த்துன்னை
வன்புணர்ந்து கொல்லும்
வக்கிர நாய்கள்
உலவும்
இத்தேசத்தில்
உலவ விட இயலாதடி
என் கண்ணே!

நீ
கல்லூரி சென்று
திரும்பும்
ஒவ்வொரு நாளும்
நாங்கள்
செத்து செத்தல்லவா
பிழைக்க வேண்டியிருக்கும்!

வரதட்சணை கொடுத்து
மணம் செய்துகொடுக்க
வக்கில்லாத பெற்றோர்
என எண்ணி விடாதே
என் மகளே!

வக்கிர ஜென்மங்கள்
அலையும் இப்பூமியில்
நீ ஜெனிப்பதைத்தான்
நாங்கள் விரும்பவில்லை!

மகாத்மா
கனவு கண்ட
சுதந்திரம் கிடைக்கட்டும்!
அப்போது மீண்டும்
என் வயிற்றில்
நீ வந்து
உதிப்பாய்!

இப்போது என்
கர்ப்பப்பையிலேயே
நீ மரணித்துவிடு
என் செல்லமே!