Thursday, November 30, 2006

23 : குறும்பு

சமையற் பொழுதினில்
சடுதியில் நுழைவாய்!
சத்தம் இன்றியே
சட்டெனத் தொடுவாய்!

விசுக்கென திரும்பினால்
விலகியே நகர்வாய்!
வம்பாய் நீயும்
கரம்பிடித்திழுப்பாய்!

மடியினிற் சாய்ந்தெனை
மயங்கிடச் செய்வாய்!
விரல்களை நீட்டி - என்
முகம்தனைத் தொடுவாய்!

தழுவிட நினைத்தே
தவிப்பாய் வருவாய்! - நான்
தழுவிட நினைத்தால்
தவிர்ப்பாய் நகர்வாய்!

என் இதழினில்
இச்சென்று
முத்தங்கள் பெறுவாய்!
எனக்கொன்று கேட்டால்
ஏளனம் செய்வாய்!

உன் குறும்புகள்
அனைத்தும்
கரும்புகள் எனக்கு!
சிறிதே குறையினும்
ஏக்கங்கள் பிறக்கும்!

என் கரு
சுமந்த
என் உயிர் நீயே!
உன் குறும்புகளாலே
உயிர் தருவாயே!

டிசம்பர் மாத தேன்கூடு போட்டிக்கு

Wednesday, November 01, 2006

22 : இலவசமாய்!


கடந்து செல்கையில்
கண்கள் பார்த்தேன்
இலவசமாய்
சில சிமிட்டல்கள்!

பார்வையைக் கொஞ்சம்
தருவாய் என்றேன்!
இலவசமாய்
கொஞ்சம் புன்னகை தந்தாய்!

புன்னகை கொஞ்சம்
கடனாய்க் கேட்டேன்!
இலவசமாய்க் கொஞ்சம்
பூக்கள் தந்தாய்!

பூக்கள் கொஞ்சம்
தூவிடு என்றேன்!
இலவசமாய் உன்
சிநேகம் தந்தாய்!

சிநேகமும் எனக்கு
போதாதென்றேன்!
இலவசமாய் கொஞ்சம்
வெட்கம் தந்தாய்!

வெட்கம் உனக்கு
அழகு என்றேன்!
இலவசமாய் நீ
காதல் தந்தாய்!

காதலால் நானும்
மகிழ்ந்திருந்தேனே!
இலவசமாய்க்
கல்லறை
ஏனடி நீயும் தந்தாய்?

நினைவினைக் கொடுத்த
இறைவா நீயும்
இலவசமாய்
மறதியைக் கொடுத்தால்
குறைந்தா போவாய்?