Thursday, January 19, 2017

ஏறுதழுவல்


பாரதம்
வரலாற்றுப் பிழையொன்றினை
வலிந்து திணித்திருக்கிக்கிறது
மீண்டும்!

மொழி
கலாச்சாரம்
பண்பாடு
பாரம்பரியம்
என்ற அடையாளங்களை
அழித்தலில்தான்
இனவொழிப்பு
தொடங்குமென்பதை
அறியாதவர்களில்லை நாங்கள்!

மொழித் திணிப்பில்
கற்ற பாடத்தை மறந்து
ஏறுதழுவல் என்ற
எம் பாரம்பரியமொன்றில்
கைவைத்துப் பார்த்திருக்கிறீர்!

அழிந்து போகிற
இனமா எம்மினம்?
அன்றைய விதைப்பின்
இரண்டாம் அறுவடைதான் இது!


முதல்வருக்கு!
ஆட்சிக்கு கவிழ்ப்பிற்கா
அஞ்சுகிறீர்?
ஆரியரிடமா கெஞ்சுகிறீர்?
ஆயிரம் ஆண்டுகளுக்கும்
உங்களுக்கே
அரியணை தருகிறோம்!
சரியென்று மட்டும்
சொல்லுங்கள்!
கட்டவிழ்க்கிறோம்
எங்கள் காளைகளை!

காவலர்களுக்கு!
அடிக்கும் கைகளுக்கும்
அன்னமிடல்தான்
எம் பண்பாடு!
தடியடி நடத்தினாலும்
உங்களுக்குள் தமிழன்
இருப்பது தெரியும்!
கவலைப் படாதீர்கள்!
உம்மேலெல்லாம் எங்களுக்கு
விரோதமில்லை!

உலகமெங்கும்
எங்களுக்கு குரல் கொடுக்கும்
உறவுகளே!
உங்களுக்கு எமது நன்றி!
உடனிருந்து
களமாட இயலவில்லையென
கவலைவேண்டாம் உங்களுக்கு!
இதனை வாசிக்கும்போது
உங்களின்
ஒரு ரோமமெனும்
சிலிர்த்திருக்கும்!
மூன்றாம் சாகுபடியில்
முதல் விதை நீங்கள்தான்!

நன்றி!

நாமக்கல் சிபி
()
இரா. ஜெகன்மோகன்
19/01/2017

No comments:

Post a Comment