Wednesday, March 08, 2006

14 : உன்னை நீயே அழித்துக் கொள்வதா?

சிறகுகள் உடைந்ததென்று
எந்தப் பறவையும்
தன்னைத் தானே
அழித்துக் கொள்வதில்லை!

காம்புகள் உதிர்ந்ததற்காய்
எந்தச் செடியும்
தன்னைத் தானே
சாய்த்துக் கொள்வதில்லை!

ஆங்காங்கே நிகழும்
பேரழிவுகளுக்காக - ஞாலம்
தன் இயக்கத்தை
நிறுத்திக் கொள்கிறதா என்ன?

தேர்வில் தோற்றதற்கா
உன்னை நீயே
அழித்துக் கொள்கிறாய்?

உன்னை நீ
அழித்துக் கொள்ளும்
உரிமையை
யார் உன்னிடம் கொடுத்தது?

வாழ மட்டுமே
உரிமை உனக்குண்டு!
சாவதற்கல்ல!

தேர்வுகளா உன்
வாழ்க்கையைத் தீர்மானிக்கும்?
அவை உன் தகுதியை
மட்டுமே தீர்மானிக்கும்!

தகுதிகளா உன்
வாழ்க்கையைத் தீர்மானிப்பவை?
உன் நம்பிக்கைதானே
அதைத் தீர்மானிக்கும்!

பள்ளிப் பாடத்துத்
தோல்விக்காய்
மரணத்தைத் தழுவுகிறாயே!
போராட்டங்கள்தானே
வாழ்க்கைப் பாடம்!
அதில் நீ தோல்வியுறலாமா?

நேற்றைய வரலாறு
எப்படியோ போகட்டும்!
நாளைய வரலாறு
உன்னால் உருவாகட்டும்!

எழுந்து வா!
நீ சாதிக்க
இன்னும்
எத்தனையோ
இருக்கிறது!

8 comments:

  1. test successful!!! என்ன டெஸ்ட்? comments-ஆ? இல்ல கவிதையேவா?? இது ரொம்ப ரொம்ப நல்ல கவிதை :)

    ReplyDelete
  2. பின்னூட்டம் பிரச்சினையில்லாமல் வருகிறதா என்று பார்க்கத்தான் இந்த டெஸ்ட். (பின்னூட்டக் கலையில் இதுவும் ஒரு பகுதி :-) )


    //இது ரொம்ப ரொம்ப நல்ல கவிதை :) //

    நன்றி.
    கல்லூரியில் எனது ஜூனியர் மாணவன் ஒருவனின் தற்கொலை என்னைப் பாதித்தது. அபோது உதித்ததுதான் இது. (ஆனால் அவன் தற்கொலை செய்துகொண்டதன் காரணங்கள் வேறு)

    ReplyDelete
  3. வணக்கம் சிபி.
    அருமையான கவிதை.

    நான் 12 ஆவது படிக்கும் போது, சராசரி சதவீதம் எடுத்து தேர்ச்சிப் பெற்றேன். பி. இ. இனி என் வாழ்வில் படிக்க முடியாது. என் வாழ்வே சூனியமாகி விட்டது என்றெல்லாம் வருந்தியிருக்கிறேன்.

    பின் பெற்றோர்கள் மற்றும் தொழிகளின் ஆறுதலால், இளங்கலை கணிணி அறிவியல் (B.Sc. Computer Science) , மற்றும் எம்.சி.ஏ யும் படித்து, இன்று வெளிநாட்டில் இருக்கிறேன்.

    பி.இ. கிடைக்கவில்லை என்ற தோல்வி என்னை வாழ்விலே வெற்றி பெற செய்திருக்கிறது.

    உங்கள் கவிதை என் கதையை ஞாபகப்படுத்தியது :)

    நன்றி!
    வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  4. கலக்கலாகவும் எழுதுறிங்க ... கலாய்த்தலாவும் எழுதுறிங்க ... பண்முகத் தன்மை சரிதானே. வழக்கம் போல் நக்கல் இல்லை நாமக்கல்லாரே உண்மையாக சொல்கிறேன்

    ReplyDelete
  5. மிக்க நன்றி நரியா அவர்களே!


    //.இ. கிடைக்கவில்லை என்ற தோல்வி என்னை வாழ்விலே வெற்றி பெற செய்திருக்கிறது//

    உண்மைதான். ஒரு தோல்வியில் இன்னொரு வெற்றிக்கான வழி இருக்கிறது. முனைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

    நானும் பன்னிரெண்டாம் வகுப்பில் அப்படித்தான் "கண்டக்டர் வேலை கூடக் கிடைக்காது" என்று தலைமை ஆசிரியர் வாழ்த்தி அனுப்பும் அளவிற்கு (எப்படியோ) தேர்ச்சி பெற்றேன். பின்னர் 10வகுப்பு மதிப்பெண்க்கள் மூலம் டிப்ளமோ பயின்று அதன் மூலம் பி.இ சேர்ந்தேன்.

    இன்னொன்று 11ம் வகுப்பிலேயே தோல்வி அடைந்து விடுவோம் என்று எண்ணியிருந்தேன், ஆனால் தற்கொலை முயற்சியெல்லாம் இல்லை.

    ரிசல்ட் பார்க்கும் அன்று ரிசல்ட் பார்த்த கையோடு வீட்டை விட்டு சென்று ராணுவத்தில் சேரலாம் என்று அப்படியே தேவையான சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டேதான் சென்றேன்.

    கடவுள் (ராணுவத்தின் மீது) கருணையுள்ளவன் போலும். தேர்ச்சி பெற வைத்துவிட்டான். பிறகுதான் தெரிந்தது எங்கள் பள்ளி ஆசிரியர்களும் தொல்லை விட்டால் ஒழிந்தது என்று பாஸ் போட்டு விட்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. //கலக்கலாகவும் எழுதுறிங்க ... கலாய்த்தலாவும் எழுதுறிங்க ... பண்முகத் தன்மை சரிதானே//

    சரிதானுங்கோவ்.

    //வழக்கம் போல் நக்கல் இல்லை நாமக்கல்லாரே உண்மையாக சொல்கிறேன் //

    நக்கலாகவே சொன்னால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்.

    எனிவே மிக்க நன்றி கோவியாரே!

    ReplyDelete
  7. arpudhamana kavidhai...chinna chinna vizhayathuku ellam tharkolayai naadum nammavargaluku oru sariyana paadam

    ReplyDelete
  8. அட்டகாசமான கவிதை...

    பல தடவை நான் கூட யோசித்ததுண்டு ;)

    ReplyDelete