Thursday, March 16, 2006

18 : கொஞ்சம் நில்லடி என்னவளே!

விடியட்டும் விடியட்டும்னு பார்த்திருந்தேன்!
எப்பவோ விடிஞ்சதுன்னு சொன்னாங்க!
கண்மணி உனக்கெனக் காத்திருந்தேன்! -நீ
கைப்பிடிச்சது அடுத்தவனைன்னு சொன்னாங்க!

உன் மனசில் யாருன்னு அறியாம
உன் விருப்பம் ஏதும் தெரியாம
இதுநாள் வரையிலும் காத்திருந்தேன்
இலவு காத்தகிளி கதையாச்சு!

கொஞ்சம் நில்லடி என்னவளே! - நான்
கேக்கறேன் அதையும் தந்துட்டுப் போ!
அடுத்தவன் தாலிய சுமக்கறவ - என்
இதயத்தை ஏந்தான் சுமக்கனுமோ?
எறிஞ்சிடு அதையும் எங்கிட்டயே!
எறியற நெஞ்சினில் தாங்கிக்கறேன்!

இறைவனின் கணக்கு இதுவானால்
அதை மாற்றுவதென்பது முடியாது!
உனைச் சொல்லி ஏதுக் குத்தமில்லை!
எல்லாம் என்னோட தலையெழுத்து!

Friday, March 10, 2006

17: நானும்......!

திருமணப் பதிவேட்டில்
அவளுடன் கையொப்பமிட்டேன்
நானும்... சாட்சியாய்!

Thursday, March 09, 2006

16 : எப்படிப் புரிய வைப்பது?


வீசி எறிந்த
ரொட்டித் துண்டை
ஓடிச் சென்றெடுத்தேன்!

போட்டியென எண்ணி
கடித்துக் குதறியது
நாய்!

எப்படிப் புரிய வைப்பது?
அது
விஷம் தோய்த்த ரொட்டியென்று!

Wednesday, March 08, 2006

15 : நல்ல காலம் பொறக்குது!

நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குதுன்னு
நடுச் சாமக் கோடங்கி
நல் வாக்கு கேளுமய்யா!

நாலு வருசமா
நாதியத்துப் போய்க்கெடந்த
சுடுகாட்டுப் பாதைக்கொரு - புதுத்
தார் ரோடு கிடைக்குதய்யா!

மாத்துத் துணியில்லேன்னு
மூனு வருசமா
மூக்காயி அழுதகுரல்
பட்டணத்தில் கேட்டுருச்சாம்!
பறந்து வருகுதய்யா
பார்சலிலே பருத்திச் சேலை!

கத்தரி வெயிலிலே
கருகிப் போன வெள்ளாமைக்கு
கண்கலங்கி நின்னதுக்கு
கடன் கொடுக்க வாராங்க!

அரை வவுத்துக் கஞ்சிக்கே
ஆலாய்ப் பறந்த சனம்
வவுராறச் சாப்பிடத்தேன்
வருகுதய்யா பிரியாணி!

பட்டனத்துச் சட்டசபை
பதவிக்காலம் முடிஞ்சிடுச்சாம்!
படியேறி வாராங்க
பாவி மக்கா ஒட்டுக் கேக்க!

14 : உன்னை நீயே அழித்துக் கொள்வதா?

சிறகுகள் உடைந்ததென்று
எந்தப் பறவையும்
தன்னைத் தானே
அழித்துக் கொள்வதில்லை!

காம்புகள் உதிர்ந்ததற்காய்
எந்தச் செடியும்
தன்னைத் தானே
சாய்த்துக் கொள்வதில்லை!

ஆங்காங்கே நிகழும்
பேரழிவுகளுக்காக - ஞாலம்
தன் இயக்கத்தை
நிறுத்திக் கொள்கிறதா என்ன?

தேர்வில் தோற்றதற்கா
உன்னை நீயே
அழித்துக் கொள்கிறாய்?

உன்னை நீ
அழித்துக் கொள்ளும்
உரிமையை
யார் உன்னிடம் கொடுத்தது?

வாழ மட்டுமே
உரிமை உனக்குண்டு!
சாவதற்கல்ல!

தேர்வுகளா உன்
வாழ்க்கையைத் தீர்மானிக்கும்?
அவை உன் தகுதியை
மட்டுமே தீர்மானிக்கும்!

தகுதிகளா உன்
வாழ்க்கையைத் தீர்மானிப்பவை?
உன் நம்பிக்கைதானே
அதைத் தீர்மானிக்கும்!

பள்ளிப் பாடத்துத்
தோல்விக்காய்
மரணத்தைத் தழுவுகிறாயே!
போராட்டங்கள்தானே
வாழ்க்கைப் பாடம்!
அதில் நீ தோல்வியுறலாமா?

நேற்றைய வரலாறு
எப்படியோ போகட்டும்!
நாளைய வரலாறு
உன்னால் உருவாகட்டும்!

எழுந்து வா!
நீ சாதிக்க
இன்னும்
எத்தனையோ
இருக்கிறது!