
நமக்காகக் காதலா
காதலுக்காக நம்மையா
எப்படிப் படைத்தான்
இறைவன்?
எப்படி இருந்தாலும்
நமக்காகக் காதலும்
காதலுக்காக நாமுமாய்த்தான்
இருக்கின்றோம்!

கன்னம் சிவக்கிறாயே!
நான் தொட்டுவிடக் கூடாதென்று
எச்சரிக்கைச் சின்னமா?
வியந்து கேட்டால்
இன்னும் சிவக்கிறாய்!
"ச்சீ போடா" என்கிறாய்!


அவ்வப்போது தருகிறாய்!
எப்போதும் கிடைக்குமா
என்றால்
"போடா மடையா"
என்று
பொய்க்கோபம் காட்டி
இன்னும் இறுக
அணைத்துக்கொள்கிறாய்!
கொள்கைப் பிடிப்பில்
உறுதியாய்த்தான் இருக்கிறாய்!

என்னவென்று
நெஞ்சில் சாய்ந்து
கேள்வி கேட்கிறாய்?
அடி! மடப் பெண்ணே!
நீ என் மேல்
காட்டுவதன் பெயர்தானடி
நேசம்!
அருகில் இருக்கும்போதும்
இமைக்காமல் பார்க்கிறாய்!
தொலைவில் நகர்ந்துவிட்டால்
விழிகளால் தேடுகிறாயே!
இதுதானடி நேசம்!
இதற்குப் பெயர்தானடி
காதல்!

அப்படியும்
உனக்குப் புரியவில்லை
என்றுதானே
உருவம் கொடுத்து
விளக்கி இருக்கிறேன்!
இதோ உன் நேசம்!
இதோ நம் காதல்!
உன் மடியினில்
உறங்குதடி!
உருவம் இல்லாமல்
நம் இருவருக்குள்ளும்
இயங்கி வந்த
நம்மை இயக்கி வைத்த
அந்த
உன்னதமான காதல்!